பல மணி நேரம் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டகிராம்: பயனாளர்கள் அவதி

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பேஸ்புக் செயலி முடங்கியதாக பயனாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

Update: 2019-03-14 03:34 GMT
சான் பிரான்ஸிகோ,

சமூக வலைதளங்களில் முன்னிலை வகிக்கும் பேஸ்புக் மற்றும் அதன் துணை நிறுவனமான இன்ஸ்டகிராம் ஆகிய அப்ளிகேஷன்கள் முடங்கியதால், பயனாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். உலகம் முழுவதிலும் 2 பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள பேஸ்புக், உலகம் முழுவதிலும் பல இடங்களில் முடங்கியது. இதனால், அவதி அடைந்த பயனாளர்கள் டுவிட்டரில் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். 

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் முடங்கியதை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம்  டுவிட்டரில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதில், பேஸ்புக் மற்றும் அதனுடைய இணை அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதில், சிக்கல்கள் இருப்பதாக பயனாளர்கள் கூறியதை நாங்கள் அறிந்துள்ளோம். இப்பிரச்சினையை கூடுமானவரையில் விரைவாக சரி செய்கிறோம்” என தெரிவித்து இருந்தது. சைபர் தாக்குதல்கள் தொடர்புடைய பிரச்சினை எதுவும் இல்லை என்றும் பேஸ்புக் விளக்கம் அளித்தது. 

டவுன்டிடெக்டர்.காம் இணையதள தரவுகளின் படி, வட அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பேஸ்புக் பக்கம் முடங்கியதாக பயனாளர்கள் அதிக அளவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வர் பிரச்சினையால், பேஸ்புக் முடங்கியது. அதேபோல், செப்டம்பரிலும்  நெட்வொர்க் பிரச்சினையால் பேஸ்புக்கில் பிரச்சினை ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்