நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2019-03-16 03:35 GMT
கிரைஸ்ட்சர்ஜ்,


நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த  சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வெள்ளை நிற சட்டை அணிந்து இருந்த அவர், கைவிலங்கு அணிவித்தபடி ஆஜர்படுத்தப்பட்டார்.

பிரென்டனை காவலில் வைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இவர் மீது மற்ற குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெண்டன் டர்ரண்ட் ஜாமீன் எதுவும் கோரவில்லை.

இதுகுறித்து பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், துப்பாக்கி உரிமத்தை முன்னரே பெற்றிருந்த பிரென்டன் கைதுசெய்யப்பட்டபோது ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், நியூசிலாந்தின் துப்பாக்கி பயன்பாட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாகவும்  தெரிவித்தார். இவரை தவிர்த்து இன்னும் இரண்டு பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவர்கள் இதற்கு முன்னர் குற்றம் புரிந்ததற்காக பதிவு ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில், பிரெண்டன் டர்ரண்ட் ஆஜர்படுத்தப்பட இருந்ததால், நீதிமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்