ஐ.நா. அமைப்பின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் 140வது இடத்திற்கு சென்றது இந்தியா

ஐ.நா. அமைப்பின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை பற்றிய அறிக்கையில் இந்த வருடம் இந்தியா 7 இடங்களை இழந்து 140வது இடத்திற்கு சென்றுள்ளது.

Update: 2019-03-20 15:42 GMT
ஐ.நா. சபை,

ஐ.நா. பொது சபையானது கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 20ந்தேதியை உலக மகிழ்ச்சி நாளாக அறிவித்தது.  இதன்பின் இந்த அமைப்பு உலகளவில் மகிழ்ச்சியாக உள்ள 156 நாடுகளை பற்றிய தரவரிசை அடங்கிய அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்த அறிக்கையானது நாடுகளின் வருவாய், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கிய வாழ்க்கைக்கான வளம், சமூக ஆதரவு மற்றும் இரக்க குணம் ஆகிய 6 முக்கிய விசயங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த அறிக்கையின்படி, கடந்த சில வருடங்களில் ஒட்டுமொத்த உலக மகிழ்ச்சியானது குறைந்துள்ளது என தெரிய வந்துள்ளது.  இதில், கடந்த 2018ம் ஆண்டு 133வது இடத்தில் இருந்த இந்தியா 7 இடங்களை இழந்து இந்த வருடம் 140வது இடத்திற்கு சென்றுள்ளது.  இந்த வருடத்தில் நாட்டில் கடந்த வருடம்போல் மகிழ்ச்சி இல்லை என அறிக்கை தெரிவிக்கின்றது.

குடிமக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்பது பற்றிய உலக நாடுகளின் அறிக்கையில், துன்பம், வருத்தம் மற்றும் கோபம் உள்ளிட்ட எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து உள்ளன எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையில் 2வது ஆண்டாக பின்லாந்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.  இதனை தொடர்ந்து டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

இதில், பாகிஸ்தான் 67வது இடத்திலும், வங்காளதேசம் 125வது இடத்திலும் மற்றும் சீனா 93வது இடத்திலும் உள்ளன.

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்தபொழுதும் அது மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் 19வது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்