இந்து சிறுமிகள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம், இம்ரான் விசாரணைக்கு உத்தரவு

பாகிஸ்தானில் இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்யப்பட்டது தொடர்பாக இம்ரான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-03-24 12:04 GMT
பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். சிந்து மாகாணத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய ரவீனா (வயது 13), ரீனா (வயது 15) என்ற இரு சிறுமிகளை பணக்காரக் கும்பல் கடத்தி சென்றுள்ளது. சிறுமிகளை மதமாற்றம் செய்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்துள்ளது. இரு சிறுமிகளுக்கும் மதக்குரு திருமணம் செய்து வைப்பது போன்ற வீடியோக்கள் வைரலாக பரவியது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வலுத்தது.

இதற்கிடையே சிறுமிகள் பேசுவது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியது. அதில் இரு சிறுமிகளும் தாங்கள், சம்மதத்துடன் மதம் மாறியதாக கூறும் காட்சிகள் இடம்பெற்று இருந்துள்ளது. இந்து சிறுமிகள் கடத்தப்பட்டது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திடம் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிக்கையை கோரியுள்ளார். 

இந்நிலையில் சிறுமிகள் கடத்தப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். சிந்து மற்றும் பஞ்சாப் மாகாண அரசுகள் இதுதொடர்பாக ஸ்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும், இதுபோன்ற நடவடிக்கைகள் இனி நடக்கக்கூடாது என இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்  என சவுத்ரி கூறியுள்ளார். சிறுமிகளை மீட்க நடவடிக்கையை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் தேசத்தின் கொடியின் வெள்ளை நிறத்தில் நிற்கிறார்கள், கொடியின் நிறங்கள் அனைத்தும் மதிப்புமிக்கவை. கொடியை பாதுகாப்பது நம்முடைய கடமை என இம்ரான் கான் கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானில் இந்து மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்