சீனாவில் பள்ளி உணவில் விஷம் கலந்த ஆசிரியர் கைது

சீனாவில் பள்ளி உணவில் விஷம் கலந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் 23 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

Update: 2019-04-02 22:45 GMT
பீஜிங்,

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் ஜியாவோஷு கிராமத்தில் தனியார் மழலையர் பள்ளி உள்ளது. இங்கு 4 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள் 50-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி காலை உணவு சாப்பிட்ட 23 குழந்தைகளுக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் 16 குழந்தைகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். 7 குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் வாங் என்ற ஆசிரியர், சக பணியாளரை பழிவாங்கும் எண்ணத்தில் காலை உணவில் உள்நோக்கத்துடன் ‘சோடியம் நைட்ரேட்’ என்ற நச்சு வேதிப்பொருளை அதிக அளவில் சேர்த்தது தெரியவந்தது.

இதன் காரணமாகத்தான் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர் வாங்-ஐ போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மழலையர் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது. அதில் உள்ள குழந்தைகள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் செய்திகள்