ஆப்கானிஸ்தானில் போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாயினர்.

Update: 2019-04-02 23:00 GMT
மஷார் இ ஷெரீப்,

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மீதான தங்களது தாக்குதல்களை தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பால்க் மாகாணம், சோல்கரா மாவட்டத்தின் சாய்கான் கிராமத்தில் ஏ.எல்.பி. என்னும் ஆப்கானிஸ்தான் உள்ளூர் போலீஸ் முகாம் செயல்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு அந்த முகாம் மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் துப்பாக்கிகளையும், கையெறி குண்டுகளையும் கொண்டு நடத்திய இந்த தாக்குதலால், அங்கிருந்த போலீசார் நிலைகுலைந்து போயினர். இருப்பினும் சுதாரித்துக்கொண்டு அவர்கள் தலீபான் பயங்கரவாதிகள் மீது எதிர் தாக்குதல் தொடுத்தனர்.

இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதன் முடிவில் 8 போலீசார் பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து சரியான தகவல் இல்லை.

இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் அதெல் ஷா கூறினார்.

மேலும் செய்திகள்