மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பஸ் மோதி 11 பேர் சாவு

மலேசியாவின் பிரபல சரக்கு விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 43 பேரை ஏற்றிக் கொண்டு, நாகிரி சிம்பிலான் மாகாணத்தின் நிலாய் நகரில் இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.

Update: 2019-04-08 23:30 GMT

கோலாலம்பூர்,

கோலாலம்பூரில் உள்ள சர்வதேச விமானநிலையத்துக்கு அருகே இந்த பஸ்  சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது.

பின்னர் சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாய் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோரவிபத்தில் பஸ் டிரைவர் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

35 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்ற அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்