ஜூலியன் அசாஞ்சே கைது:பத்திரிகை சுதந்திரத்துக்கான இருண்ட தருணம்-எட்வர்டு ஸ்னோடன்

ஜூலியன் அசாஞ்சேவின் கைது பத்திரிகை சுதந்திரத்துக்கான இருண்ட தருணம் என்று அமெரிக்கா குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-11 12:32 GMT
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள  ஈகுவேடார்  தூதரகத்தில் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.

 ஈகுவேடார்  அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசாஞ்சே விரைவில் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார் என்று லண்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அசாஞ்சேவை லண்டன் போலீஸார் இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இது குறித்து  அமெரிக்கா குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன்  கூறியதாவது:-

 ஈகுவேடார் நாட்டு தூதரக அதிகாரிகள் தூதரகத்துக்குள் நுழைந்து விருது வென்ற ஒரு பத்திரிகையாளரை இழுத்துச் செல்ல  லண்டனின் ரகசிய போலீஸாரை அழைத்துள்ளனர். அசாஞ்சேவை விமர்சிப்பவர்கள் வேண்டுமானால் இதைக் கண்டு மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இது பத்திரிகை சுதந்திரத்துக்கான இருண்ட தருணம்  என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் பலவற்றை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்னோடன். பிற நாடுகளின் அரசு செயல்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ரகசியமாகக் கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தினார். இதன் காரணமாக அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எட்வர்டு ஸ்னோடன், அதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்