நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்

நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-17 23:15 GMT
லண்டன்,

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவர் அனுமதி கோரியுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு கடும் போட்டியாளராக இருந்தது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். அவ்வளவு பெரிய நிறுவனம், நஷ்டத்தில் இயங்குவதை அறிந்து கவலைப்படுகிறேன். அதன் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுப்பணம் ரூ.35 ஆயிரம் கோடியை எடுத்து, பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு இந்திய அரசு வழங்கியது. ஆனால், தனியார் விமான நிறுவனமான கிங்பிஷருக்கு உதவவில்லை. இப்போது, ஜெட் ஏர்வேக்கும் உதவவில்லை. தனியார் விமான நிறுவனங்களை இந்திய அரசு பாரபட்சமாகவே நடத்துகிறது.

நான் கிங்பிஷர் நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனை 100 சதவீதம் திருப்பித்தர தயாராக இருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளேன். ஆயினும், என் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. எல்லாம் முன்வினைப்பயன்.

நான் லண்டனில் இருந்தாலும், இந்தியாவில் உள்ள சிறைகளில் இருந்தாலும் அந்த கடனை திருப்பித்தந்து விடுவேன். ஆனால், வங்கிகள் ஏன் நான் கொடுக்க முன்வரும் பணத்தை ஏற்க மறுக்கின்றன? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்