மெக்சிகோ நாட்டில் பயங்கரம்: விருந்தில் துப்பாக்கிச்சூடு - 13 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டில் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-04-20 22:15 GMT
மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டில் வெராகுரூஸ் மாகாணம், வன்முறைக்கு பெயர் பெற்றதாகும்.

அங்கு மினாடிட்லான் நகரில் உள்ள மது விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த சிலர், அந்த விடுதியின் உரிமையாளர் எல் பெக்கியை சந்திக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

விடுதிக்குள் நுழைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இதில், விருந்தில் கலந்துகொண்டிருந்த பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.

அவர்களில் 5 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை தரப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து ஒன்றும் தெரியவில்லை. இருப்பினும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்