இலங்கை சம்பவம்: நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பழிவாங்க நடத்தப்பட்டது - முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக மந்திரி தகவல்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், நியூசிலாந்து நாட்டில் மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்க நடத்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று இலங்கை மந்திரி தெரிவித்தார்.

Update: 2019-04-23 23:00 GMT
கொழும்பு,

இலங்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் பண்டிகையன்று 3 தேவாலயங்கள், 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. நேற்றுமுன்தினம் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தபோது குண்டு வெடித்தது.

மேலும், கொழும்பு பஸ் நிலையத்திலும், சர்வதேச விமான நிலையம் அருகிலும் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அடுத்தடுத்த சம்பவங்களால் நாடு முழுவதும் பீதி நிலவி வருகிறது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு அவசர நிலை அமலுக்கு வந்தது. இதன்படி, சந்தேகத்துக்கு உரிய எவரையும், கோர்ட்டு உத்தரவின்றி பிடித்து விசாரிக்கவோ, கைது செய்யவோ ராணுவத்துக்கும், போலீசுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம், விடுதலைப்புலிகளுடன் சண்டை நடந்தபோது, ஏற்கனவே ராணுவத்துக்கு அளிக்கப்பட்டது ஆகும்.

வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் பயணம் செய்த வேனின் டிரைவரும், பயங்கரவாதிகள் சிறிது காலம் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளரும் அடங்குவர். சிரியா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இந்த பட்டியலில் உள்ளார்.

தாக்குதல்கள் பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அதிபர் சிறிசேனா அமைத்துள்ளார்.

இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்பு பற்றிய முதல்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 15-ந்தேதி, நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் 2 மசூதிகளில் மர்ம நபர்கள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அதில், 55 பேர் பலியானார்கள்.

அந்த தாக்குதலுக்கு பழிக்குப்பழி வாங்கவே தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று இலங்கை ராணுவ துணை மந்திரி ருவன் விஜேவர்த்தனே இலங்கை நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தில் நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

நியூசிலாந்து தாக்குதலை தொடர்ந்து, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த ஒருவர், சமூக வலைத்தளத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்திருந்தார். தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. பலியான வெளிநாட்டினர் 38 பேர். அவர்களில் இந்தியர்கள் 10 பேர் ஆவர். தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தை தடை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில், பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பேசியதாவது:-

சர்வதேச பயங்கரவாதம், இலங்கைக்கு வந்து விட்டது. இத்தகைய தாக்குதல்களுக்கு முஸ்லிம்களே எதிராக உள்ளனர். ஒரு சிலர்தான் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர். இதற்காக அந்த இயக்கத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் அச்சுறுத்தலுக்கு அரசு முடிவு கட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே பேசுகையில், “தேச பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறி விட்டது. நான் ஆட்சியை விட்டு இறங்கியபோது, பயங்கரவாதம் இல்லாமல் இருந்தது. என் ஆட்சியாக இருந்தால், இத்தகைய தாக்குதல் நடந்திருக்காது” என்று கூறினார்.

உள்நாட்டு அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத், இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக இலங்கை சுகாதார மந்திரி ரஜிதா சேனரத்னே தெரிவித்தார். சர்வதேச அமைப்பின் உதவியுடன் நடத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை பொருளாதார சீர்திருத்தத்துறை மந்திரி ஹர்ஷா டி சில்வாவும் இதே கருத்தை தெரிவித்தார். “இவ்வளவு பெரிய தாக்குதல்களை உள்ளூர் அமைப்பால் நடத்த முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. வெளிநாட்டு அமைப்பின் உதவியுடன் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. இது, இலங்கையை மட்டும் குறிவைத்து நடந்ததா? அல்லது பன்னாட்டு தாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியா? என்றும் கேள்வி எழுகிறது” என்று அவர் கூறினார்.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத், இதற்கு முன்பு பெரிய அளவில் எந்த தாக்குதலும் நடத்தியது இல்லை. ஆனால், கடந்த ஆண்டு புத்தர் சிலைகளை உடைத்ததன் மூலம் இந்த இயக்கம் பிரபலமானது.

மேலும், தலைமையில் நிலவும் பிளவையும் இச்சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையிலான விரிசல் காரணமாக, தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கையை பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று மந்திரிசபை செய்தித்தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே குற்றம் சாட்டினார்.

ஆனால், அதிபருக்கே இந்த தகவல் முன்கூட்டியே தெரியுமா? என்று தெரியவில்லை. இதுபற்றி அதிபரின் மூத்த ஆலோசகர் லக்திலகா கூறுகையில், “பாதுகாப்பு அமைப்புகளிடையே இந்த தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்டது எங்களுக்கு தெரியும். என்ன நடந்தது என்பதை விசாரிக்கவே 3 பேர் குழுவை அதிபர் அமைத்துள்ளார்” என்றார்.

இதற்கிடையே, இலங்கையில் நேற்று துக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தேசிய கொடி, அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. தொடர் குண்டுவெடிப்பில் பலியானோருக்கு நாட்டு மக்கள் 3 நிமிட நேரம் மவுனம் அனுசரித்தனர். முதலாவது குண்டு வெடிப்பு நடந்த நேரத்தை குறிக்கும்வகையில், காலை 8.30 மணிக்கு இந்த மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குண்டு வெடிப்பில் பலியானோரின் உடல்களை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் அடக்கம் செய்யும் நிகழ்வுகள் நேற்று நடந்தன. தாக்குதலுக்கு உள்ளான புனித செபஸ்தியார் ஆலயம் அருகில் உள்ள இடுகாட்டில் 30 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்