இலங்கை தாக்குதலை நியூசிலாந்து மசூதி தாக்குதலுடன் தொடர்புபடுத்துவது முட்டாள்தனம்; முஸ்லிம் கவுன்சில் துணை தலைவர்

இலங்கை தாக்குதலை நியூசிலாந்து மசூதி தாக்குதலுடன் தொடர்புபடுத்துவது முட்டாள்தனம் என இலங்கை முஸ்லிம் கவுன்சில் துணை தலைவர் கூறியுள்ளார். #SriLankaBlast

Update: 2019-04-24 12:37 GMT
கொழும்பு,

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை 8.45 மணியளவில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் 2 தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த அவசரகால கூட்டத்தில், ராணுவ மந்திரி ருவான் விஜேவர்தனே பேசும்பொழுது, நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரில் 2 மசூதிகளின் மீது நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் செயலாக குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்பது முதற்கட்ட விசாரணை முடிவில் தெரிய வந்துள்ளது என கூறினார்.

நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் கடந்த மார்ச் 15ந்தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர்.  இவர்களில் 5 பேர் இந்தியர்கள் ஆவர்.  இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமும் அடைந்தனர். தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் கைது செய்யப்பட்டான்.

இலங்கை ராணுவ மந்திரி பேசியதுபற்றி இலங்கை முஸ்லிம் கவுன்சில் துணை தலைவர் ஹில்மி அகமது கூறும்பொழுது, நியூசிலாந்துடன் இந்த தாக்குதல்களை தொடர்புபடுத்துவது என்பது முட்டாள்தனம் என கூறினார்.

நியூசிலாந்தில் நடந்த தாக்குதலானது, முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடியை காண உலகின் கண்களை திறந்துள்ளது.  உலகம் முழுவதும் இஸ்லாமியர்களை பற்றி வளர்ந்து வரும் அச்ச உணர்வுக்கு இடையே இந்த தாக்குதலானது அவர்களின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் ஆசீர்வாதம்போல் அமைந்துள்ளது என கூறினார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் சமூகங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தியதற்காக, நோபல் பரிசு குழுவுக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.  அவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற நிச்சயம் தகுதியானவர் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.  எனினும் நியூசிலாந்து மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலாக இதனை நியாயப்படுத்தி எதனையும் கூறவில்லை.

மேலும் செய்திகள்