வடகொரியா தலைவரை சந்தித்து பேச தயார் - ஜப்பான் பிரதமர் பேட்டி

வடகொரியா தலைவரை சந்தித்து பேச தயார் என ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-03 22:45 GMT
டோக்கியோ,

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் இடையில் நடந்த 2-வது பேச்சுவார்த்தை எதிர்பாராதவிதமாக தோல்வியில் முடிந்தது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரஷியா சென்று அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசி, கொரிய தீபகற்ப பிரச்சினையில் தனக்கு ஆதரவு கோரினார்.

இந்த நிலையில், ஜப்பான்-வடகொரியா இடையிலான நீண்டகால மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை எந்தவித நிபந்தனையும் இன்றி சந்தித்து பேச தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.

தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது இதுபற்றி அவர் கூறுகையில், “வடகெரியா தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து திறந்த மனதுடன், வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன்” என்றார்.

மேலும், “கிம் ஜாங் அன்னை நேரில் சந்தித்து பேசாமல் ஜப்பான் மற்றும் வடகொரியா இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கையற்ற தன்மையை நாம் உடைக்க முடியாது” எனவும் அவர் கூறினார்.

கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச, ஷின் ஜோ அபே விருப்பம் தெரிவித்திருப்பது தொடர்பாக வடகொரியா உடனடியாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்