இலங்கையில் சமூக வலைதளங்கள் மீண்டும் முடக்கம்

இலங்கையில், நீர்கொழும்பும் பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து சமூக வலைதளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.

Update: 2019-05-06 02:49 GMT
கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து கடந்த மாதம் 21-ந் தேதி தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. உலக நாடுகளை உலுக்கிய இந்த தற்கொலை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலையை பிறப்பித்துள்ள இலங்கை அரசு, ராணுவத்துக்கும், போலீசாருக்கும் அதிக அதிகாரம் கொடுத்து குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை வேட்டையாட பணித்து உள்ளது. அதன்படி இந்த தாக்குதல் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, வெளிநாட்டினருக்கான குறிப்பாக மத பிரசாரகர்களுக்கான விசா நடைமுறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை இலங்கை அரசு கொண்டு வந்திருக்கிறது. அதன்படி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பலர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருப்போர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே,  நீர்க்கொழும்பு பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் நிலவிய அமைதியின்மையை அடுத்து சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாவதை தடுக்கும் நோக்கில்,  சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பகுதியி நேற்றிரவு முதல் இன்று காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக, இலங்கையில் கடந்த 21-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, அன்று முதல் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 9 நாட்களுக்குப் பின்னர் சமூக வலைத்தளங்களுக்கான தடை நீக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்