அமெரிக்காவில் ஆற்றுக்குள் விழுந்த விமானம்: வேகத்தை கட்டுப்படுத்தும் கருவி செயலிழந்ததே காரணம்

அமெரிக்காவில் விமானம் ஆற்றுக்குள் விழுந்த சம்பவத்துக்கு, வேகத்தை கட்டுப்படுத்தும் கருவி செயலிழந்ததே காரணம் என தெரியவந்துள்ளது.

Update: 2019-05-06 23:15 GMT
நியூயார்க்,

அமெரிக்காவின் குவாண்டனாமோ கடற்படை தளத்தில் இருந்து கடந்த 2-ந் தேதி போயிங்-737 ரக பயணிகள் விமானம் 143 பேருடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு சென்றது. புளோரிடாவில் ஜேக்சன் வில்லே கடற்படை தளத்தில் தரை இறங்கியபோது ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் அருகில் உள்ள புனித ஜான்ஸ் ஆற்றில் விழுந்தது. இதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் 21 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. எப்படி அந்த விமானம், ஓடுதளத்தில் இருந்து சறுக்கி ஆற்றில் விழுந்தது என்பது குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது.

இதில், விமானம் தரையிறங்கும் போது அதன் வேகத்தை கட்டுப்படுத்தும் கருவிகளில் ஒன்று வேலை செய்யாமல் போனதே விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த கருவி வேலை செய்யாததால் ஓடுதளத்தில் நிற்காமல் ஓடிய விமானம் ஆற்றுக்குள் விழுந்துவிட்டது என தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்