இங்கிலாந்தில் பரபரப்பு: சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம் - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

இங்கிலாந்தில் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமான விபத்தில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2019-05-13 22:45 GMT
லண்டன்,

இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள மான்மவுத்ஷைர் நகரில் இருந்து, சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் ஒரு விமானியும், ஒரு பெண் உள்பட 2 பயணிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அதன் எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் தாழ்வாக பறந்த விமானம் மின்கம்பிகளின் மீது உரசியது.

இதையடுத்து, விமானத்தை அருகில் உள்ள இருவழி சாலையில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்தார். ஆனால் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. விமானம் விழுந்தபோது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையில், அந்த வழியாக காரில் வந்த ராணுவ வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரி ஜோயல் ஸ்நார் என்பவர் சாலையில் விமானம் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் சற்றும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டு, விமானத்துக்குள் சிக்கியிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டார். அவர்கள் மீட்கப்பட்ட சில நொடிகளில் விமானம் தீப்பற்றி எரிந்தது. இதில் விமானம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. ஜோயல் ஸ்நாரின் துரித நடவடிக்கையால் அவர்கள் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் பலத்த காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்