அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை

தகவல் தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவில் அவசர நிலையை ஜனாதிபதி டிரம்ப் பிரகடனம் செய்தார்.

Update: 2019-05-16 23:30 GMT
வாஷிங்டன்,

சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம், ஈரான் மீது தாங்கள் விதித்த தடைகளை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் வைத்ததோடு, மறைமுகமாக நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்த விவகாரம் தொடர்பாக ஹூவாய் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோ கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிறநாடுகளில் உளவு பார்த்து வருவதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன.

அத்துடன் ஹூவாய் நிறுவனத்தின் 5-ம் தலைமுறை செல்போன் ‘நெட்வொர்க்’ (5ஜி) சேவை ஆராய்ச்சிக்கும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அறிவுசார் விவகாரங்கள் திருடப்படுவதையும், உளவு பார்க்கப்படுவதையும் தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை பிரகடனம் செய்து, ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

இதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். அதில், எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என்ற போதிலும், சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை குறிவைத்துத்தான் இந்த உத்தரவை அவர் பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு சேவைகளில் தீவிரமாக அதிகரித்து வரும் பாதிப்பு மற்றும் வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடி நிலையால் வெளிநாட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்வது தடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், நெருக்கடி நிலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன் ஹூவாய் மற்றும் அதோடு தொடர்புடைய 70 நிறுவனங்களை தடை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான பட்டியலில் அமெரிக்க வர்த்தக துறை இணைத்தது.

இதன் மூலம், அமெரிக்க அரசின் சிறப்பு அனுமதியைப் பெறாமல், ஹூவாய் நிறுவனம் அமெரிக்க தொழில்நுட்பங்கள், கருவிகள், பாகங்களை வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்