தீவிரவாதத்துக்கு எதிராக எடுத்த முயற்சிகள் என்ன? பாகிஸ்தானுக்கு இந்தியா சரமாரி கேள்வி: சீன மாநாட்டில் பரபரப்பு

தீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரம் மற்றும் நிதி மோசடி நடவடிக்கைகளை தடுக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து சீனாவில் நடந்த ஆசியா பசிபிக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

Update: 2019-05-18 05:49 GMT
இஸ்லாமாபாத்: 

சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக ஜெய்ஸ்-இ-முகமது, ஜமாத்-உத்-தவா, பலாஹ்-இ-இன்சானியாத் அறக்கட்டளை மற்றும் இதர தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து அந்த அமைப்புகளின் சொத்துக்களை முடக்கியது. ஆசியா பசிபிக் அமைப்பின்(ஏபிஜி) நிதி நடவடிக்கை குழுவின்(எப்ஏடிஎப்) 2 நாள் கூட்டம் சீனாவின் காங்சோ நகரில் நடந்து முடிந்துள்ளது. இதில் பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர் முகமது யூனஸ் டாக்கா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியதாக பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் குழுவினர் தீவிரவாத அமைப்புகள் பலவற்றுக்கு தடை விதித்து அவற்றின் சொத்துக்களையும், நிதி ஆதாரங்களை முடக்கிய விவரத்தை தெரிவித்தனர். எப்ஏடிஎப் நடவடிக்கை திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வரும் செப்டம்பர் காலவரைக்குள் முடிப்பதாகவும் பாகிஸ்தான் குழு தெரிவித்துள்ளது. 

கரன்சி கடத்தலை தடுக்க எல்லைகளில் சுங்கத்துறை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதையும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக ‘எல்லை கடந்த கரன்சி கடத்தல் தடுப்பு குழு (சிபிசிஎம்) என்ற சிறப்பு அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் பாகிஸ்தான் குழுவினர் தெரிவித்தனர். பாகிஸ்தான் சமர்ப்பித்த அறிக்கையை நிதி நடவடிக்கை குழுவில் ஆசியா பசிபிக் அமைப்பு தாக்கல் செய்ய உள்ளது. 

மேலும் செய்திகள்