நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 மீனவர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 மீனவர்கள் உயிரிழந்தனர்.

Update: 2019-05-18 22:30 GMT
அபுஜா,

நைஜீரியா நாட்டில் மத அடிப்படையிலான அரசை நிறுவும் நோக்கத்தில் போகோஹரம் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். அவ்வப்போது அவர்கள் நடத்துகிற தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாவதுதான் பெரும் கொடுமையாக இருக்கிறது.

இந்த நிலையில் அங்கு மைதுகுரி நகரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள அலவ் அணையில் கடந்த வியாழக்கிழமை மீனவர்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சென்ற போகோஹரம் பயங்கரவாதிகள் மிருகத்தனமான தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று குவித்து விட்டு தப்பினர்.

இந்த தாக்குதலில் 10 அப்பாவி மீனவர்கள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கோண்டுகா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என போர்னோ மாகாண நெருக்கடி மேலாண்மை அமைப்பின் தலைவர் பெல்லோ தன்பட்டா தெரிவித்தார்.

அப்பாவி மீனவர்களை போகோஹரம் பயங்கரவாதிகள் ஈவிரக்கமின்றி கொன்று குவித்திருப்பது நைஜீரியாவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போகோஹரம் பயங்கரவாதிகள் 2009-ம் ஆண்டில் இருந்து இந்த 10 ஆண்டுகளில் இப்படி 20 ஆயிரம் அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளதோடு, 26 லட்சம் பேர் வீடு வாசல்களை இழப்பதற்கும் காரணமாக இருந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்