சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவித்தது சாதனை : ஐ.நா. சபையில் உறுப்புநாடுகள் பெருமிதம்

இந்தியாவில் கடந்த பிப்ரவரி 14–ந் தேதி துணை ராணுவ வீரர்களை குறிவைத்து புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியது, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு ஆகும்.

Update: 2019-05-22 00:15 GMT

நியூயார்க், 

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா பல முறை முயற்சித்தும் சீனா முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே பிரான்ஸ் தலைமையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தன. இந்த முயற்சி வெற்றி கண்டது. 

கடந்த 1–ந் தேதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. இது இந்தியா தூதரக ரீதியில் எடுத்த முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இதையொட்டி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நேற்று முன்தினம் அமெரிக்க தூதர் (பொறுப்பு) ஜோனத்தான் கோஹன் பேசினார். அப்போது அவர், ‘‘ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்ததும், பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் செயல்பட்டு வருகிற பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். கோரசனை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

இது குறிப்பிடத்தகுந்த சாதனை. அசாரை தடை செய்திருப்பது பயங்கரவாதிகளை அவர்களது செயல்களுக்காக பொறுப்பேற்க செய்ய முடியும் என்பதை காட்டுகிறது’’ என கூறினார். இதே போன்று ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளும் கருத்து தெரிவித்தன.

மேலும் செய்திகள்