உலகைச்சுற்றி...

* ஈரானுடன் பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவுக்கு 8 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.56 ஆயிரம் கோடி) மதிப்புடைய ஆயுதங்களை வழங்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

Update: 2019-05-25 23:00 GMT
* தென்ஆப்பிரிக்காவில் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிப்பெற்றது. இதையடுத்து, தற்போதைய அதிபர் சிரில் ரமாபோசா மீண்டும் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். நேற்று தலைநகர் பிரிட்டோரியாவில் நடந்த விழாவில் அவர் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

* பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ ஜங்வி ஆகியவற்றுக்காக நிதி திரட்டப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாதுகாப்பு படைவீரர்கள் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

* ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நடக்கும் பட்சத்தில் அது, வடகொரியாவின் அணு ஆயுத பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

* இந்தோனேசியாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அந்த தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபின்யான்டோ தேர்தல் முடிவுகளை எதிர்த்து அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

* ஜப்பானின் தென் பகுதியில் உள்ள சிபா பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை. 

மேலும் செய்திகள்