துபாயில் பஸ் விபத்து; 12 இந்தியர்கள் பரிதாப சாவு - மேலும் 5 பேர் உயிரிழந்த சோகம்

துபாயில் ஓமன் அரசு பஸ் விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் 12 பேர் உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-06-07 23:45 GMT
துபாய்,

ரம்ஜான் பண்டிகை சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் துபாய் உள்ளிட்ட அமீரக பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இந்த கொண்டாட்டங்களுக்காக ஓமன் நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு பண்டிகையை முடித்து தற்போது அவர்கள் அமீரகம் திரும்பி வருகின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் சாலை போக்குவரத்தையே தேர்வு செய்கின்றனர். அந்தவகையில் ரம்ஜான் கொண்டாட்டத்துக்காக ஓமன் வந்த சிலரை ஏற்றிக்கொண்டு ஓமன் நாட்டு தேசிய போக்குவரத்து நிறுவனமான மவுசலாத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று முன்தினம் மாலையில் துபாய்க்கு வந்து கொண்டிருந்தது.

இந்த பஸ்சில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 31 பேர் இருந்தனர். இந்த பஸ் துபாய் முகம்மது பின் ஜாயித் சாலையில் ராஷிதியா பிரிவு அருகே சென்றபோது, சாலையில் அதிக வாகனங்கள் இல்லாததால் டிரைவர் அதிவேகத்தில் பஸ்சை இயக்கியதாக தெரிகிறது. இதனால் அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தவறுதலாக மாற்றுப்பாதையில் சென்றது.

கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு இருந்த அந்த சாலையில் பெரிய இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பு மீது திடீரென அந்த பஸ் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பகுதி உருக்குலைந்தது.

இதனால் பஸ்சில் பயணம் செய்த 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். மீதமுள்ள 6 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த துபாய் போலீசார் காயமடைந்த அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஷித் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உள்பட மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த மீதமுள்ள 8 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து துபாய் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பேரும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தியர்கள் உயிரிழந்த தகவலை உறுதி செய்த அங்குள்ள இந்திய துணைத்தூதரகம், அவர்களின் பெயரையும் வெளியிட்டுள்ளது. அதன்படி விமல் குமார் கார்த்திகேயன், கிரண் ஜானி, ஜமாலுதீன் முகம்மத்தூனி ஜமாலுதீன், ராஜன் புதியபுரையில் கோபாலன் (இவர்கள் 4 பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள்), விக்ரம் ஜவஹர் தாக்கூர், பெர்ரோஸ்கான் அஜீஸ் பதான், ரேஷ்மா பெர்ரோஸ்கான் அஜீஸ் பதான், உமர் சோனோகட்டாவத் முகம்மது புத்தீன், நபீல் உமர் சோனோகட்டாவத், வாசுதேவ் விஷந்தாஸ், பிரபுலா மாதவன் தீப குமார், ரோஷினி மூல்சந்தானி ஆகிய இந்தியர்கள் உயிரிழந்ததாக தூதரகம் குறிப்பிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்