பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 3 ராணுவ அதிகாரிகள் பலி

பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 ராணுவ அதிகாரிகள் பலியாகினர்.

Update: 2019-06-08 20:30 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் நடந்தவண்ணமாக உள்ளன. இவற்றில் இதுவரை பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் பலியாகினர். 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில், அங்கு நேற்று முன்தினம் கார்கமர் பகுதியில் ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் ஒரு வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த ஐ.இ.டி. வெடிகுண்டு வெடித்தது. அதில் ராணுவ வாகனம் சிக்கி வெடித்து சிதறியது.

அந்த வாகனத்தில் இருந்த 3 அதிகாரிகள், ஒரு வீரர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். பலியானவர்கள் லெப்டினன்ட் கர்னல் ரஷித் கரீம், மேஜர் மோயீஸ் மக்சூத், கேப்டன் ஆர்ப் உல்லா, ஹவல்தார் ஜாகீர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

இந்த தாக்குதலையடுத்து அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்