மாலியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 100 பேர் சாவு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் அடிக்கடி பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

Update: 2019-06-10 23:15 GMT

பமாகோ, 

 பயங்கரவாத குழுக்கள் ஒருபுறம் அங்கு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மாலியில் வசித்து வரும் இரு பிரிவினருக்கு இடையேயும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தினரும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தினரும் தங்களுக்குள் அடிக்கடி மோதிக்கொள்கின்றனர்.

இந்த நிலையில் மாலியின் மோப்தி பிராந்தியத்துக்கு உட்பட்ட சோபனே–கோவ் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவில் துப்பாக்கிகளுடன் புகுந்த மர்ம நபர்கள் சிலர் கண்ணில்பட்ட அனைவரையும் சரமாரியாக சுட்டனர். இதில் சுமார் 100 பேர் வரை பலியாகினர். இந்த வெறியாட்டத்தை சில மணி நேரங்கள் தொடர்ந்த அந்த நபர்கள் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவத்துக்கு பின் அங்கு அதிகாரிகள் சென்று உயிரிழந்தவர்களின் பிணங்களை மீட்டனர். அதில் 95 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் சுமார் 20 பேரை காணவில்லை என தெரிகிறது.

இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இது பயங்கரவாதிகளின் சதிச்செயல் என மாலி அரசு கூறியுள்ளது. ஆனால் புலானி இனத்தினர்தான் இந்த தாக்குதலை அரங்கேற்றியதாக அருகில் உள்ள பங்காஸ் நகர மேயர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்