எத்தியோப்பியாவில் குழந்தை பெற்ற 30 நிமிடத்தில் தேர்வு எழுதிய பெண்

எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரோமியா பிராந்தியத்தில் உள்ள மெட்டு நகரை சேர்ந்த பெண் அல்மாஸ் டெரீஸ் (வயது 21).

Update: 2019-06-12 23:15 GMT
அடிஸ் அபாபா, 

மேல்நிலை படிப்பு படித்து வரும் இவர், திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமானார்.

இந்த நிலையில், பிரசவம் நடப்பதற்கு முன்னரே பள்ளி தேர்வுகளை எழுதி முடித்து விட வேண்டும் என தீர்மானித்திருந்தார். ஆனால் ரம்ஜான் பண்டிகை காரணமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

கடந்த திங்கட்கிழமை தேர்வு எழுத செல்வதற்கு முன்பு அல்மாஸ் டெரீசுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதே சமயம் குழந்தை பிறந்த காரணத்தால் பள்ளிப்படிப்பை கைவிட விரும்பாத அல்மாஸ் டெரீஸ், தேர்வுகளை எழுதுவதில் விடாப்பிடியாக இருந்தார்.

எனவே அவரது கணவர் தடீஸ் துலு, அல்மாஸ் டெரீஸ் படிக்கும் பள்ளி நிர்வாகிகளிடம் பேசி, மருத்துவமனையிலேயே அவர் தேர்வு எழுத ஒப்புதல் பெற்றார்.

அதன்படி குழந்தை பெற்றெடுத்த அரை மணி நேரத்துக்குள்ளாக மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே அல்மாஸ் டெரீஸ் தனது தேர்வுகளை எழுதினார்.

ஒரே நாளில் ஆங்கிலம், அம்ஹாரிக், கணிதம் உள்ளிட்ட தேர்வுகளை அவர் எழுதினார். அடுத்த 2 நாட்களில் நடக்கும் தேர்வுகளை அவர் தேர்வு மையத்துக்குச் சென்று எழுத இருக்கிறார்.

இதுபற்றி அல்மாஸ் டெரீஸ் கூறுகையில், “கர்ப்பிணியாக இருக்கும்போது படிப்பது ஒன்றும் பிரச்சினையாக இருக்கவில்லை. அடுத்த ஆண்டு வரை நான் தேர்ச்சி பெற காத்திருக்க விரும்பவில்லை. எனக்கு பிரசவம் ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. எனவேதான் அவசரமாக தேர்வு எழுத உட்கார்ந்தேன்” என கூறினார்.

மேலும் அவர், தேர்வுகளை சிறப்பாக எழுதியிருப்பதாகவும், தனது ஆண் குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்