பாரிஸில் விசாரணைக்காக ஆஜராக சவுதி இளவரசிக்கு உத்தரவு

சவுதி அரசர் முகமது பின் சல்மானின் சகோதரி இளவரசி ஹஸா, அடுத்த மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2019-06-13 10:53 GMT
சவுதி இளவரசி ஹஸாவுக்கு, பாரிஸில் ஆவென்யூ போச் பகுதியில் சொந்தமாக மிகவும் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து பிரான்ஸ்  நாட்டவரை தாக்கியதாக இளவரசி ஹஸா, அவரது பாதுகாவலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டவர் கூறியதாவது:-

இளவரசி வீட்டில் புதுப்பித்தல் வேலைக்காக நான் சென்றேன். அங்கு நான் புகைப்படம் எடுப்பதை கண்ட இளவரசி கோபமடைந்தார். ஊடகங்களுக்கு விற்க புகைப்படம் எடுத்தாயா என குற்றம்சாட்டினார். 40 வயதுடைய சவுதி இளவரசி, என்னை தாக்கும் படி பாதுகாவலருக்கு உத்தரவிட்டார். இந்த நாயை கொன்று விடு, இவன் வாழ தகுதியற்றவன் என கோபத்தில் கத்தினார்.

பாதுகாவலர் என்னை ஒரு மணி நேரமாக அடித்து துன்புறுத்தினார். இறுதியில், வலுகட்டயமாக இளவரசி காலில் முத்தமிட வைத்தார்கள். புகைப்படத்தை பறிமுதல் செய்த பின்னர் அவர்கள் என்னை விடுவித்தனர் என பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், 2016-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

2017-ம் ஆண்டில் வழங்கப்பட்ட ஒரு சர்வதேச கைது உத்தரவாதத்தின் கீழ் இளவரசி ஹஸா கைது செய்யப்படாததால் அவர் விசாரணையில் இருந்து தப்பித்தார். தற்போது, குறித்த வழக்கு விசாரணைக்காக பாரிஸில் ஆஜராகும் படி இளவசரி ஹஸாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்