சீனாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 12 பேர் பலி

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 12 பேர் பலியானார்கள். 122 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-06-18 02:42 GMT
பீஜிங்,

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள இபின் நகரில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்த நகரை கடுமையாக உலுக்கியது.

உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 10.55 மணிக்கு முதல் நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 16 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

ஒரு நிமிடத்துக்கும் மேலாக நீடித்த இந்த நிலநடுக்கத்தின் போது அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகங்கள் உள்ளிட்ட உயரமான கட்டிடங் கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறிஅடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் நேற்று அதிகாலை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நகரத்தின் முக்கிய சாலைகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன.

கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர். உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ராணுவ வீரர்கள், தீயணைப்பு படை வீரர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் தீவிர மீட்புபணியில் ஈடுபட்டனர்.

எனினும் கட்டிட இடிபாடுகளில் இருந்து 12 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 122 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர் கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலநடுக்கத்தால் சுமார் 4 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து, பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாகாண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு சிச்சுவானின் செங்டூ நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 19 பேர் பலியாகினர். முன்னதாக 2008-ம் ஆண்டு அதே நகரில் 7.9 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக் கத்தில் சுமார் 90 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்