ஆப்பிரிக்காவில் வேட்டையாடப்பட்ட யானைகளின் உடலை தின்ற கழுகுகள் சாவு

ஆப்பிரிக்காவில் வேட்டையாடப்பட்ட யானைகளின் உடலை தின்ற கழுகுகள் உயிரிழந்தது.

Update: 2019-06-21 23:00 GMT
கபோரோன்,

தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் வேட்டையாடப்பட்ட 3 யானைகளின் உடலை தின்ற 537 கழுகுகள் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக கழுகுகள், பிற பறவைகள் மற்றும் விலங்குகளின் சடலங்களை தின்பது வழக்கம் தான் என்றும், ஆனால் இந்த யானைகளின் உடல்களை தின்ற கழுகுகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இறந்த கழுகுகளில் 468 கழுகுகள் வெண்முதுகு கொண்ட கழுகுகள் ஆகும். இவை அழிவின் விளிம்பில் இருக்கும் கழுகு இனம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றுடன் டவினி எனப்படும் அரிய வகை கழுகுகள் 2, 17 வெண்தலை கழுகு, 28 ஹூடட் என்ற வகை கழுகுகள் உள்ளிட்டவையும் பரிதாபமாக செத்துள்ளன.

இந்த நிலையில் முதல்கட்ட விசாரணையில் வேட்டையாடப்பட்ட 3 யானைகளின் உடல்களில் நச்சுத்தன்மை கலந்துள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக வேட்டையாடும் போது விலங்குகள் உயிரிழந்த இடத்திற்கு மேல் கழுகுகள் வட்டமிடுவதால், வேட்டையாடுபவர்கள் வனத்துறையினரிடம் எளிதாக சிக்கிக்கொள்கின்றனர். எனவே வேட்டையாடப்பட்ட யானையின் உடலில் வேட்டைக்காரர்கள் விஷத்தை செலுத்தி கழுகுகளை தின்னவைத்து, கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்