பயணத்தின் போது தூங்கிவிட்டார்: விமானத்தில் தனித்துவிடப்பட்ட பெண் - பல மணி நேரங்களுக்கு பின் மீட்பு

பயணத்தின் போது தூங்கிய, விமானத்தில் தனித்துவிடப்பட்ட பெண் ஒருவர், பல மணி நேரங்களுக்கு பின் மீட்கப்பட்டார்.

Update: 2019-06-24 22:29 GMT
ஒட்டாவா,

கனடாவின் கியூபெக் நகரில் இருந்து டொராண்டோ நகருக்கு ‘ஏர் கனடா’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றது. இதில் டிபானி ஆடம்ஸ் என்ற பெண் பயணம் செய்தார். வெறும் 90 நிமிடங்கள் கொண்ட இந்த பயணத்தின் இடையே, டிபானி ஆடம்ஸ் அயர்ந்து தூங்கிவிட்டார்.

நீண்ட நேரத்துக்கு பிறகு அவர் கண்விழித்தார். அப்போது இருள் சூழ்ந்த விமானத்தில் தான் மட்டுமே தனியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அவரது செல்போனில் ‘சார்ஜ்’ இல்லாததால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியாத நிலையில் தவித்தார்.

பின்னர் விமானத்தில் இருந்து வெளியேற வழி தேடிய அவருக்கு, விமானிகளின் அறையில் இருந்து ஒரு ‘டார்ச்லைட்’ கிடைத்தது. ஜன்னல் வழியாக ‘டார்ச்லைட்’ அடித்து அவசர உதவிக்கான சமிக்ஞைகளை விடுத்தார். நிறுத்தப்பட்டிருந்த விமானத்தினுள் இருந்து வெளிச்சம் வருவதை பார்த்த விமான நிலைய ஊழியர் ஒருவர், உதவிக்கு வந்தார்.

பின்னர் அவர் மீட்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையில் ஏர் கனடா நிறுவனத்தின் நிர்வாகிகள் டிபானி ஆடம்சை தொலைபேசியில் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கோரினர். மேலும், விமானத்தில் டிபானி ஆடம்ஸ் மட்டும் தனியாக சிக்கியது எப்படி என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9-ந் தேதி நடந்த இந்த சம்பவம் பற்றி டிபானி ஆடம்சின் தோழி ஒருவர் ‘பேஸ்புக்’கில் பதிவிட்டதன் மூலம் தற்போது இது வெளியுலகத்துக்கு தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்