உலக அளவில் ‘செல்பி’க்கு பலியானவர்களில் இந்தியர்கள் முதலிடம்

உலக அளவில் ‘செல்பி’க்கு பலியானவர்களில் இந்தியர்களே முதல் இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-06-29 20:00 GMT
ரியோ டீ ஜெனிரோ,

உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன்களால் எந்த அளவுக்கு நன்மை கிடைக்கிறதோ, அதைவிட அதிகமாக தீமைகள் நடக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

அவற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ‘செல்பி’ மோகத்தால் ஏற்படும் விபத்துகள். உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ‘செல்பி’க்கு அடிமையாகி இருக்கிறார்கள். அதீத ‘செல்பி’ ஆர்வத்தால் உயிர் இழப்பு ஏற்படும் துயர சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்த நிலையில் சுறா மீன்கள் தாக்குதலில் உயிரிழந்தவர்களை விட ‘செல்பி’ எடுக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரான்சை சேர்ந்த தனியார் சுகாதார அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

2011 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலத்தில் உலகளவில் ‘செல்பி’ எடுத்ததால் 259 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். ஆனால் இதே காலகட்டத்தில் சுறா மீன்கள் தாக்கியதில் 50 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

‘செல்பி’ மோகத்தால் பெண்கள் மற்றும் இளைஞர்களே அதிகளவு இறந்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவில் தான் ‘செல்பி’ எடுக்கும்போது அதிகமான உயிர் பலி ஏற்பட்டு உள்ளது.

அதாவது, 2011 முதல் 2017-ம் ஆண்டு வரை உலகளவில் ‘செல்பி’ விபத்துகளில் உயிரிழந்தவர்களில் பாதிபேர் இந்தியர்கள் ஆவர். இந்த கால கட்டத்தில் இந்தியாவில் ‘செல்பி’ எடுக்கும்போது விபத்தில் சிக்கி 159 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளில் உயரமான பாலங்களில் இருந்தும், உயரமான கட்டிடங்களில் இருந்தும் ‘செல்பி’ எடுக்க ஆசைப்பட்டே பலர் உயிரை பறிகொடுத்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்