அடுத்த மாதம் 20-ந்தேதி இம்ரான்கான், அமெரிக்கா செல்கிறார் - டிரம்புடன் முதல்முறையாக சந்திப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் 20-ந்தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு அதிபர் டிரம்பை முதல்முறையாக சந்திக்க உள்ளார்.

Update: 2019-06-29 22:45 GMT
இஸ்லாமாபாத்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்றதில் இருந்தே அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு பதற்றம் நிறைந்ததாக இருந்து வருகிறது.

பாகிஸ்தானில் இயங்கி வருகிற பயங்கரவாத அமைப்புகள் மீது, அந்த நாட்டின் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்று அமெரிக்கா கருதி, அந்த நாட்டுக்கு வழங்கி வந்த பயங்கரவாத ஒழிப்பு நிதி உதவியை நிறுத்தியது.

பொய்களையும், வஞ்சகங்களையும் தவிர வேறொன்றையும் பாகிஸ்தான் வழங்கவில்லை என்று டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், அடுத்த மாதம் 20-ந்தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 5 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பயணத்தின்போது முதல்முறையாக அவர் டிரம்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பயணத்தை இம்ரான்கான் இந்த ஜூன் மாதம் மேற்கொள்ள முதலில் திட்டமிட்டிருந்ததாகவும், உள்நாட்டு பட்ஜெட் வேலைகள் காரணமாக ஒத்தி போடப்பட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதையொட்டி பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி நிருபர்களிடம் பேசும்போது, “பிரதமர் இம்ரான்கான், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திப்பு வெகு விரைவில் நடைபெறும். பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க டிரம்ப் அழைப்பின்பேரில்தான் பிரதமர் இம்ரான்கான் வாஷிங்டன் செல்கிறார்” என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்