100 நாட்களுக்கு மேல் உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்தார் : மனைவியை கொன்று நாடகமாடிய இளைஞருக்கு மரண தண்டனை

சீனாவில் மனைவியை கொன்று 100 நாட்களுக்கு மேல் உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து நாடகமாடிய இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2019-07-05 22:45 GMT

பீஜிங்,

சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் ஜூ சியாடோங் (வயது 30). அங்குள்ள ஒரு துணிக்கடையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருந்த யாங் லிப்பிங் (30) என்ற பெண்ணுக்கும் 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் ஆனது.

திருமணம் ஆன 10 மாதங்களுக்குள்ளாகவே கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

2016–ம் ஆண்டு அக்டோபர் 17–ந் தேதி ஜூ சியாடோங்–யாங் லிப்பிங் இடையே வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த ஜூ சியாடோங், தனது மனைவியை அடித்து கொலை செய்தார்.

பின்னர் போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கொலையை மறைத்து தனது மனைவியின் உடலை பாதுகாக்க முடிவு செய்தார். இதற்காக ஆன்லைன் மூலம் குளிர்சாதன பெட்டி ஒன்றை வாங்கினார்.

திடீரென குளிர்சாதன பெட்டி வாங்கியது குறித்து குடும்பத்தினர் கேட்டபோது தனது செல்லப்பிராணிகளான பாம்புகள், பல்லிகள் மற்றும் தவளைகளுக்கு இறைச்சி சேமிப்பதற்காக தான் அதை வாங்கியதாக கூறி சமாளித்துவிட்டார்.

அதன் பின்னர் தனது மனைவியின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்து, யார் கண்ணிலும் படாத வகையில் மறைத்துவிட்டார். அத்துடன் தன்னுடைய மனைவி இறந்தது யாருக்கும் தெரியாமல் இருக்க மனைவியின் சமூக வலைத்தள கணக்குகளை பயன்படுத்தி, அவரது பெற்றோர் மற்றும் நண்பர்களின் குறுஞ்செய்திகளுக்கு ஜூ சியாடோங் பதிலளித்து வந்துள்ளார்.

எனினும் கொலை சம்பவம் ஜூ சியாடோங்கின் மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி கொண்டே இருந்ததால், கொலையை மறக்க சீனாவின் பல நகரங்களுக்கும், தென் கொரியாவுக்கும் அடிக்கடி சுற்றுலா சென்று வந்தார்.

மேலும் தனது மனைவியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்ததோடு, வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி, உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்த சூழலில் 2017–ம் ஆண்டு பிப்ரவரி 1–ந் தேதி யாங் லிப்பிங்கின் தந்தை பிறந்தநாளையொட்டி இரவு விருந்தில் கலந்துகொள்ளும்படி ஜூ சியாடோங்–யாங் லிப்பிங் தம்பதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனால் செய்வதறியாது திகைத்த ஜூ சியாடோங், இனியும் உண்மையை மறைக்க முடியாது என்பதை உணர்ந்தார்.

இதையடுத்து, அவர் போலீசில் சரணடைந்தார். இந்த வழக்கில் ஜூ சியாடோங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்