ஈராக்கில் வான்தாக்குதலில் 18 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை, அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து ஈராக் ராணுவம் விரட்டியடித்தது.

Update: 2019-07-05 23:15 GMT

பாக்தாத்,

தங்களது மண்ணில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக 2017–ம் ஆண்டு ஈராக் அறிவித்தது.

ஆனால் குறுகிய காலத்திலேயே அங்கு மீண்டும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் காலூன்ற தொடங்கிவிட்டனர். குறிப்பாக சிரியா, ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய அண்டை நாடுகளுடன் எல்லை பகுதியை கொண்டிருக்கும் அன்பர் பாலைவன பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது.

அவர்கள் பொதுமக்களை கடத்தி சென்று கொலை செய்வது, போலீஸ் சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஈராக் ராணுவம் போராடி வருகிறது.

இந்த நிலையில், அன்பர் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, அமெரிக்க கூட்டுப்படைகள் மற்றும் ஈராக் ராணுவம் அதிரடி வான்தாக்குதல் நடத்தின. இந்த அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 18 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

மேலும் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள், ஆயுத கிடங்குகள் மற்றும் அவர்களது வாகனங்கள் உள்ளிட்டவையும் நிர்மூலமாக்கப்பட்டன.

மேலும் செய்திகள்