சிரியாவில் நெஞ்சை நொறுக்கும் சோகம் கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் சாவு

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

Update: 2019-07-10 21:45 GMT
டமாஸ்கஸ், 

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்தனர்.அங்கு டெயிர் அல் ஜோர் மாகாணத்தில் உள்ள டப்லான் நகரம், ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசம் இருந்து வந்தது. கடந்த ஆண்டு உள்நாட்டு படையினர் அந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து விடுவித்தனர்.

இந்த நிலையில் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் புதைத்து விட்டு சென்ற கண்ணி வெடிகளில் சிக்கி அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கதை ஆகி வருகிறது.

அங்கு நேற்று முன்தினம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற கண்ணி வெடி தாக்குதலில் ஏதுமறியாத அப்பாவி குழந்தைகள் 7 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் உடல் சிதறி உயிரிழந்தது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி நடந்த கண்ணிவெடி தாக்குதலில் 3 குழந்தைகள் பலியாகினர். மார்ச் 6-ந் தேதி நடந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி மாதம் 24-ந் தேதி நடந்த தாக்குதலில் 24 அப்பாவி மக்கள் பலியாகினர். இப்படி தொடர்ந்து கண்ணிவெடி தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகி வருவது அங்கு பதற்றத்தை உருவாக்கி வருகிறது.

மேலும் செய்திகள்