உலகிலேயே உயரமான ஏரி

ஆண்டிஸ் மலைக்கு இடைப்பட்ட பீடபூமிப் பகுதியில் உள்ள டிட்டிகாகா ஏரி தான் உலகிலேயே உயரமான ஏரி.

Update: 2019-07-13 11:39 GMT
தென்அமெரிக்கா கண்டத்தில் பெரு மற்றும் பொலிவியா நாடுகளுக்கு இடையில் ஆண்டிஸ் மலைக்கு இடைப்பட்ட பீடபூமிப் பகுதியில் அமைந்திருக்கிறது, டிட்டிகாகா ஏரி. உலகிலேயே உயரமான ஏரி இதுதான். ஆம், கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 811 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த ஏரி.

இந்தப் பெரிய ஏரி, 190 கி.மீ. நீளமானது. மொத்தம் 9 ஆயிரத்து 65 சதுர கிலோமீட்டர் அளவுக்குப் பரந்து விரிந்திருக்கிற இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 275 மீட்டர். தென்அமெரிக்காவிலேயே பெரிய ஏரி இதுதான். (வெனிசூலா நாட்டின் மராகைபோ ஏரி, டிட்டிகாகாவுக்கு இணையாகப் பெரிதானதுதான். ஆனால் மராகைபோவை ஏரி என்று கூற முடியாது, அது கரீபிய கடலின் ஒரு பகுதியே என்கிறார்கள் நிபுணர்கள் சிலர்.)

டிட்டிகாகா ஏரியில் வளரும் ஒருவகை நாணலைக் கொண்டு பெரிய மிதவைகளை உள்ளூர் மக்கள் உருவாக்குகிறார்கள். அதில் மணலை நிரப்பி, மிதக்கும் தோட்டங்களாக மாற்றுகிறார்கள். அவற்றில், மிளகாய் முதல் பல்வேறு காய்கறிகள் வரை விளைவிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்