ராணுவ ஆட்சி நடத்தி சர்வாதிகாரியாக திகழ்ந்த வங்காளதேச முன்னாள் அதிபர் எர்ஷாத் மரணம்

வங்காளதேசத்தில் ராணுவ ஆட்சி நடத்தி சர்வாதிகாரியாக திகழ்ந்த முன்னாள் அதிபர் எர்ஷாத் மரணமடைந்தார்.

Update: 2019-07-14 22:30 GMT
டாக்கா, 

வங்காளதேசத்தின் முன்னாள் அதிபர் முகமது எர்ஷாத். 91 வயதான இவருக்கு கடந்த மாதம் 22-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், வயது மூப்பு காரணமாக அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்தன. அதனை தொடர்ந்து, கடந்த 9 நாட்களாக செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7.45 மணி அளவில் மருத்துவமனையில் எர்ஷாத் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு தற்போதைய அதிபர் அப்துல் ஹமீத், பிரதமர் ஷேக் ஹசீனா, நாடாளுமன்ற சபாநாயகர் ஷீரின் ஷர்மீன் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராணுவ தளபதி

1930-ம் ஆண்டில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் டின்ஹட்டா நகரில் எர்ஷாத் பிறந்தார். அதன் பின்னர் 1948-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது எர்ஷாத்தின் குடும்பத்தினர் வங்காளதேசத்தில் (அப்போதைய கிழக்கு பாகிஸ்தான்) குடியேறினர்.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்த எர்ஷாத், 1952-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். அதன் பின்னர் பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசம் சுதந்திரம் பெற்றதும் வங்காளதேச ராணுவத்தில் சேர்ந்தார்.

அதனை தொடர்ந்து 1978-ம் ஆண்டு வங்கதேச ராணுவ தளபதியாக அவர் பொறுப்பு ஏற்றார். 1982-ம் ஆண்டு இவரது தலைமையிலான ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. 1983-ம் ஆண்டு தன்னை அதிபராக அறிவித்து கொண்ட அவர் சர்வாதிகாரி போல் ஆட்சி நடத்தி வந்தார். அதன் பின்னர் 1986-ம் ஆண்டு ஜாதியா என்ற கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.

நல்லடக்கம்

அந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். தொடர்ந்து 8 ஆண்டுகள் சர்வாதிகார அதிபராக திகழ்ந்து வந்த எர்ஷாத், 1990-ம் ஆண்டு ஜனநாயக புரட்சி வெடித்ததால் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஊழல் வழக்கில் சிறை சென்ற எர்ஷாத் சிறையில் இருந்தபடியே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

தொடர்ந்து பலமுறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட எர்ஷாத், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். எர்ஷாத்துக்கு 2 மனைவிகள். 2-வது மனைவி மூலம் மகன் பிறந்த நிலையில், 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எர்ஷாத்தின் உடல் அவரது சொந்த ஊரான ரங்பூர் மாவட்டத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, மக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மீண்டும் டாக்கா கொண்டுவரப்பட்டு பனானி ராணுவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்