மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாக். ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Update: 2019-07-17 07:41 GMT
இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத். அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வந்தான். 

ஹபீஸ் சயீத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா சர்வதேச நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் அளித்து வந்தது. இந்த நிலையில், ஹபீஸ் சயீத், லாகூரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக்குழு இம்ரான் கான் அரசுக்கு கடும் நெருக்கடி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்