ஸ்பெயினில் வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகள் - சமூக வலைத்தளத்தில் வைரலாகிய புகைப்படம்

ஸ்பெயினில் வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகளின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2019-07-19 23:00 GMT
மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டின் கடற்கரை நகரமான காடீசில் உள்ள கடை ஒன்றின் முன்பு 2 வரிக்குதிரைகள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. இதை பார்த்த ஒரு நபர் வரிக்குதிரைகள் ஊருக்குள் எப்படி வந்தது, என்ற ஆச்சரியத்தோடு அவற்றின் அருகில் சென்று பார்த்தார். அப்போது தான் அவை வரிக்குதிரைகள் அல்ல கழுதைகள் என்பது தெரியவந்தது.

கழுதைகளுக்கு யாரோ வரிக்குதிரை போல் வண்ணம் பூசி தெருவில் உலாவவிடப்பட்டதை அவர் அறிந்துகொண்டார். உடனே அவர் அந்த கழுதைகளை புகைப் படம் எடுத்து, விலங்குகள் நல ஆர்வலர்களிடம் புகார் தெரிவித்தார். விசாரணையில் அண்மையில் காடீசில் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக அந்த கழுதைகளுக்கு வரிக் குதிரைகள் போல வண்ணம் பூசியது தெரியவந்தது.

அந்த ஜோடிக்கு வனவிலங்குகளுக்கு இடையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசையாம். ஆனால் அதற்கு வசதி இல்லாததால் தெருவில் சுற்றித்திரிந்த கழுதைகளை பிடித்து, அவற்றுக்கு வரிக்குதிரைகள் போல் வண்ணம் பூசி திருமண நிகழ்ச்சியில் அங்கும் இங்குமாக அலையவிட்டுள்ளனர்.

பின்னர் திருமணம் முடிந்ததும் கழுதைகளை அப்படியே தெருவில் விட்டுவிட்டனர். வரிக்குதிரைகள் போல் வண்ணம் பூசப்பட்ட அந்த கழுதைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்