விளைச்சலைவிட அதிக வருவாய் தந்த யூ-டியூப்

உலகம் முழுவதும் பல விவசாயிகள், யூ-டியூப் மூலம் அதிக வருவாய் ஈட்டுவது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு விவசாய வருமானத்தைவிட யூ-டியூப் வருவாய் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2019-08-12 09:56 GMT
அமெரிக்காவின் மின்னிசோட்டாவை சேர்ந்த ஷாச் ஜான்சன் என்பவர், சோளம் மற்றும் சோயாபீன்ஸ் விவசாயி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்து விவசாய வீடியோக்களை யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்து வருகிறார். அதற்கு நல்ல பலனாக தற்போது 3 லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள். 5 கோடி முறை அவரது வீடியோக்கள் பார்க்கப்பட்டு உள்ளன. இதனால் கடந்த ஆண்டில் அவர் விவசாய வருமானத்தைவிட 5 மடங்கு வருவாய் யூ-டியூப் வழியே ஈட்டி உள்ளார்.

எப்படி மருந்து தெளிப்பது, வடிகால் அமைப்பது, விளைச்சலை பெருக்குவது என்பது சாதாரண வீடியோ பதிவுகள் பலருக்கும் பயனுள்ளதாக அமைவதால் இவருக்கு வருவாய் குவிந்துள்ளது.

இதுபோல மற்றொரு விவசாயி சுஷானே குக் என்பவர் 40 ஆயிரம் வாடிக்கையாளர்களுடன் அதிக லாபம் ஈட்டி வருகிறார். அமெரிக்காவில் 59 சதவீதம் பேரும், உலகம் முழுவதும் கணிசமான வாடிக்கையாளர்கள் யூ-டியூப் ரசிக்கிறார்கள். இதனால் இவர்களைப்போல பல்வேறு தொழில் செய்பவர்களும் தங்களை யூ-டியூப்பில் பிரபலப்படுத்தி லாபம் ஈட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்