பிலிப்பைன்சில் படகில் இருந்து சிறுவனை இழுத்து சென்று தின்ற முதலை

பிலிப்பைன்சில் குடும்பத்தினர் முன்னே படகில் இருந்து 10 வயது சிறுவனை முதலை ஒன்று இழுத்து சென்று தின்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Update: 2019-08-14 14:02 GMT
மணிலா,

பிலிப்பைன்ஸ் தீவுகளில் ஒன்றான பலவான் தீவு இயற்கை வளங்கள் நிறைந்தது.  எனினும், அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாகவும் உள்ளது.  இங்குள்ள பாலபக் பகுதியில் நீர்நிலைகளில் உப்புநீர் வகையை சேர்ந்த முதலைகள் வசித்து வருகின்றன.  உலகில் மிக பெரிய முதலைகளான இவை ஏறக்குறைய 6 மீட்டர் (20 அடி) வரை வளரும்.  ஆயிரம் கிலோ வரை எடை கொண்டிருக்கும்.

பிலிப்பைன்சின் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றால் இவற்றின் வாழ்விடம் பாதிப்படைந்து உள்ளது.  இதனால் சிறிய நீர்நிலைகளில் வசிக்க கூடிய சூழலுக்கு அவை தள்ளப்பட்டு உள்ளன.

ஒரே வாழ்விடம் ஆனது மனிதர்கள் மற்றும் முதலைகளால் பகிரப்பட்டு வந்துள்ளது.  இதனால் மனிதர்கள் கொல்லப்படுவது அல்லது தாக்கப்படுவது நடந்து வருகிறது.

கடந்த 2015ம் ஆண்டில் இருந்து பாலபக் பகுதியில் முதலை தாக்குதல்கள் இல்லாத வருடங்களே இல்லை.  இந்த நிலையில், பிலிப்பைன்சின் தெற்கே குடும்பத்தினர் முன்னே படகில் இருந்து 10 வயது சிறுவனை முதலை ஒன்று இழுத்து சென்றது.  அவனது மூத்த சகோதரர்கள் இருவர் அருகே இருந்துள்ளனர்.  அந்த சிறுவனை அவனது தந்தை இரவு முழுவதும் தேடியுள்ளார்.  ஆனால் பலன் எதுவுமில்லை.

ஆனால் மீனவர் ஒருவர் முதலை கொன்று தின்ற சிறுவனின் மீதமிருந்த உடலை கண்டுள்ளார்.

கடந்த வருடம் பிப்ரவரியில் இந்த பகுதியில் மீனவர் ஒருவர் முதலையால் கடித்து கொல்லப்பட்டார்.  அவரது உடலின் மீதம் கண்டெடுக்கப்பட்டது.  இதற்கு சில மாதங்களுக்கு முன் அவரது உறவினரான 12 வயது சிறுமியை முதலை நீருக்குள் இழுத்து சென்றது.  சிறுமியின் உடல் கிடைக்கவில்லை.

இந்த வருடம் பிப்ரவரியில், ஆற்றில் நீந்தி சென்ற 12 வயது சிறுவனை முதலை ஒன்று பிடித்து கொண்டது.  ஆனால் அவனது சகோதரர்கள் கட்டையால் தொடர்ந்து அடித்து உள்ளனர்.  இதனால் முதலை அவனை விட்டு விட்டது.  தொடர்ந்து அந்த ஆற்றில் இதுபோன்ற அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்