வங்காள தேசம் : 12,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

வங்காள தேச தலைநகர் டாக்காவின் நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 972 டெங்கு நோயாளிகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2019-08-19 10:49 GMT
டாக்கா, 

ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை வங்காள தேசம் முழுவதும் ஏறத்தாழ 12,000 மக்கள் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில், டாக்காவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அதிகமான டெங்கு நோயாளிகள் வருவதாக கூறப்படுகிறது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டாக்காவிற்கு வெளியே உள்ள மருத்துவமனைகள், குறிப்பாக கிராமப்புறங்களில் சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லாத மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

500 படுக்கைகள் கொண்ட பரித்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தற்போது 751 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 277 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகரித்து வரும் டெங்கு நோயாளிகளின் பெருக்கம் அங்குள்ள மருத்துவமனைகளின் சுமையை அதிகரித்துள்ளது என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 பக்ரீத் பண்டிகையின் போது ஏராளமான மக்கள் தலைநகர் டாக்காவிலிருந்து வெவ்வேறு மாவட்டங்களுக்கு பயணித்ததால் இங்கிருந்து டெங்கு காய்ச்சல் வெளிமாவட்டங்களிலும் வேகமாக பரவி வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை, வங்காள தேசத்தில் இந்த ஆண்டில் மட்டும் 50,000-க்கும் மேற்ப்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்