ருமேனியாவில் பயங்கரம்: மருத்துவமனையில் 4 பேர் அடித்துக்கொலை

ருமேனியாவில் மருத்துவமனை ஒன்றில் 4 பேர் அடித்துக்கொல்லப்பட்டனர்.

Update: 2019-08-19 22:45 GMT
புக்கரெஸ்ட்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சபாகோ நகரில் தனியாருக்கு சொந்தமான மனநல மருத்துவமனை இயங்கி வருகிறது. கடந்த 15-ந்தேதி 38 வயதான நபர் ஒருவர் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீள்வதற்காக அவராகவே சிகிச்சைக்கு வந்தார். மன நலம் பாதிக்கப்பட்டிருந்த முதியவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் இந்த நபர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த நபர் திடீரென மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அவர் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தப்படும் நீளமான கம்பியை எடுத்து சக நோயாளிகளை சரமாரியாக தாக்கினார்.

இதில் 60 வயதுக்கு மேற்பட்ட 4 நோயாளிகளின் மண்டை உடைந்து, படுக்கையில் இருந்தபடியே துடிதுடித்து இறந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் கோமா நிலைக்கு சென்றதாகவும், மற்ற 7 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், நோயாளிகளை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரை சில மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்