ஜாகீர் நாயக் பொது இடங்களில் உரை நிகழ்த்த மலேசியா தடை

இஸ்லாமிய போதகர் ஜாகீர் நாயக் பொது இடங்களில் உரை நிகழ்த்த மலேசியா தடை விதித்துள்ளது.

Update: 2019-08-20 06:03 GMT
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து தப்புவதற்காக மத போதகர் ஜாகீர் நாயக் மலேசியாவில் தஞ்சம் அடைந்து உள்ளார். ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருகிறார் ஜாகீர் நாயக்.

சமீபத்தில், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரை விட தென்கிழக்கு ஆசிய நாட்டில் இந்துக்களுக்கு "100 மடங்கு அதிக உரிமைகள்" இருப்பதாக ஜாகீர் நாயக் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியது.

ஜாகீர் நாயக்கின் கருத்துக்கள் மலேசியாவில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கலாம் என்று மலேசிய அமைச்சர்கள் தெரிவித்தனர். 

இதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என  கூறப்பட்டது. மேலும் மலேசியாவின் 7 மாநிலங்களில் அவர் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகீர் நாயக்கிற்கு நாட்டில் பொது இடங்களில்  நிகழ்த்த மலேசியா தடை விதித்துள்ளது.

மலாய் மெயில் தகவல் படி,  நாடு முழுவதும் உள்ள அனைத்து போலீஸ்  படையினருக்கும் இந்த உத்தரவை விவரிக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. ராயல் மலேசியா போலீஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் டத்தோ அஸ்மாவதி அகமதுவை, மலாய் மெயில் தொடர்பு கொண்டு இந்த உத்தரவை உறுதிப்படுத்தி  உள்ளதாக கூறி உள்ளது.

"ஆம். இதுபோன்ற உத்தரவு அனைத்து போலீஸ்  படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்பின் நலனுக்காகவும் இன நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காகவும் செய்யப்பட்டது" என டத்தோ அஸ்மாவதி அகமது கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்