லாவோஸ் நாட்டில் கோர விபத்து: பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

லாவோஸ் நாட்டில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது.

Update: 2019-08-20 23:30 GMT
வியன்டியன்,

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று லாவோஸ். இதன் தலைநகர் வியன்டியனில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள லுவாங் பிரபாங் நகரம் புகழ்பெற்ற சுற்றுலாதலமாக விளங்குகிறது.

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகள், பாரம்பரியத்தை பறைசாற்றும் கட்டிடங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்டவை இங்கு இருப்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் லுவாங் பிரபாங் நகருக்கு வந்து செல்கிறார்கள்.

அந்த வகையில் சீனாவை சேர்ந்த ஒரு சுற்றுலா குழு லாவோஸ் நாட்டுக்கு சென்றது. அவர்கள் நேற்று முன்தினம் மாலை தலைநகர் வியன்டியனில் இருந்து லுவாங் பிரபாங் நகருக்கு பஸ்சில் புறப்பட்டனர்.

சுற்றுலா உதவியாளர் ஒருவர் உள்பட சீனாவை சேர்ந்த 43 பேரும், லாவோஸ் நாட்டை சேர்ந்த டிரைவர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகியோரும் பஸ்சில் பயணித்தனர்.

லுவாங் பிரபாங் நகருக்கு அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ், சாலையில் இருந்து விலகி சாலையோரத்தில் உள்ள சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதையடுத்து, போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

முதலில் 8 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. 31 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இதற்கிடையில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

பஸ்சில் ‘பிரேக்’ திடீரென செயலிழந்ததால் விபத்து நேரிட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்