இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்

சபாநாயகர் தன் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

Update: 2019-08-22 07:52 GMT
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அவரது குழந்தைக்கு சபாநாயகர் தன் இருக்கையில் வைத்து பாலூட்டிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.யாக இருப்பவர் டமாடி கோபி. இவருக்கு கடந்த ஜூலை மாதம் செயற்கை முறை கருவூட்டல் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதனால், பேறுகால விடுமுறையில் இருந்த அவர் கடந்த புதன்கிழமையன்று தனது குழந்தை ஸ்மித் உடன் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது சபையில் நடந்த விவாதம் ஒன்றில் அவர் பங்கேற்றுப் பேசினார். அவர் தன்னுடைய குழந்தையை வைத்திருந்தார்.

இதைக்கண்ட சபாநாயகர் ட்ரவர் மல்லார்ட், குழந்தையை வாங்கி தனது மடியில் வைத்து பாட்டிலில் பாலூட்டினார். இவரின் இந்த செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில் இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பொதுவாக சபாநாயகர் இருக்கை என்பது அவையை நடத்துபவர்களுக்கு உரியது. ஆனால் இன்று ஒரு மிக முக்கியமான மனிதர் என்னுடன் இந்த நாற்காலியை பகிர்ந்து கொள்கிறார். எம்.பி. டமாடி கோபி மற்றும் அவரது மனைவி டிம் இருவருக்கும் உங்களது குடும்பத்தின் புதிய வரவுக்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்