ஸ்பெயின் நாட்டில் ராணுவ விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது - விமானி பலி

ஸ்பெயின் நாட்டில் ராணுவ விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி விமானி ஒருவர் பலியானார்.

Update: 2019-08-27 21:39 GMT
மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான மரசியா மாகாணத்தில், கடற்கரை நகரமான லா மங்காவில் இருந்து, ‘சி-101’ ரக ராணுவ விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

விமானத்தில் ஒரே ஒரு விமானி மட்டும் இருந்தார். இந்த விமானம் அங்குள்ள கடற்கரைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் விமானி பலியானார். இதற்கிடையில் கடற்கரையில் இருந்த சிலர் விமானம் கடலுக்குள் விழும் காட்சியை செல்போன்களில் ‘வீடியோ’ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விமான விபத்தை தொடர்ந்து, அங்குள்ள 3 கடற்கரைகள் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்