ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி, உற்சாக வரவேற்பு

2 நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷ்யா வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-09-04 00:57 GMT
விளாடிவோஸ்டோக், 

ரஷியாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் நடக்கிறது.   ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின்பேரில், அக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா சென்றடைந்தார். ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

அதிகாலை 5.09 மணிக்கு டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி,  ”விளாடிவோஸ்டோக் வந்தடைந்தேன். இந்த குறுகிய கால மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்தார். 

ரஷிய பயணத்தையொட்டி, பிரதமர் மோடி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் நண்பர் புதினுடன் இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்கள் மற்றும் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருக்கிறேன். எனது பயணம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் கொண்டுள்ள ஆர்வத்தை கோடிட்டுக் காட்டுகிறது.

அதுபோல், கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க வரும் உலக தலைவர்களை சந்திப்பதற்கும் ஆவலாக இருக்கிறேன். இந்திய தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளேன்.

இந்தியாவும், ரஷியாவும் சிறப்பான நல்லுறவை பராமரித்து வருகின்றன. பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, விண்வெளி பயன்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம். வர்த்தக, முதலீட்டு உறவும் வளர்ந்து வருகிறது. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்