வங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.85 லட்சம்: ஜாலியாக செலவு செய்த தம்பதி

வங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்ச ரூபாயை செலவு செய்ததால் தம்பதி, வழக்கை சந்தித்து வருகின்றனர்.

Update: 2019-09-09 11:23 GMT
பென்சில்வேனியா,

அமெரிக்காவின் பென்சில்வேனியா  மாகாணத்தில் உள்ள மாண்டோர்ஸ்வில்லி  என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் வில்லியம்ஸ் மற்றும் டிஃப்பனி வில்லியம்ஸ்  தம்பதி.

இவர்கள் வங்கிக்கணக்கில் தவறுதலாக இந்திய மதிப்பில் 85 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. சட்டப்படி இதை வங்கிக்கு தெரிவிக்காத அந்த தம்பதி கேம்பர், சேவி, ரேஸ் கார்கள் வாங்குவது என்றும் நண்பர்களுக்கு உதவியது என்றும் டெபாசிட் ஆன பணத்தின் பெருமளவை ஜாலியாக செலவு செய்து விட்டனர். வணிகத்துக்காக பிபி அண்ட் டி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம், சொல் பிழை காரணமாக தம்பதியின் வங்கிக்கணக்கில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சரியான வங்கிக்கணக்குக்கு பணத்தை அனுப்பிய வங்கி மேற்கொண்டு நடத்திய விசாரணையில், ராபர்ட் மற்றும் டிஃப்பனி வங்கிக்கணக்கில் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டதும் அவர்கள் இரண்டரை வாரத்தில் 71 லட்ச ரூபாய் வரை செலவு செய்து விட்டதும் தெரிய வந்தது. முதலில் பணத்தை திருப்பி தருவதாக கூறிய தம்பதி பின்னர் தகவல் தொடர்பை துண்டித்துக் கொண்டதாக வங்கி தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர்கள் மீது திருட்டு, திருடிய பொருளை வைத்திருத்தல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரான ராபர்ட் மற்றும் டிஃப்பனி, தலா 18 லட்ச ரூபாய் செலுத்தி ஜாமீன் பெற்று உள்ளனர்.

மேலும் செய்திகள்