மாம்பழங்களை திருடிய வழக்கில் இந்தியருக்கு ஜெயில்

துபாய் விமான நிலையத்தில் பயணியின் உடமைக்குள் இருந்து மாம்பழங்களை திருடிய வழக்கில், வரும் 23ம் தேதி இந்தியர் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.

Update: 2019-09-13 12:32 GMT
துபாய்,

27 வயதான இந்தியர் ஒருவர், கடந்த 2017ம் ஆண்டு, துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றியபோது, இந்தியாவுக்கு புறப்பட தயாராக இருந்த பயணியின் உடமையை பிரித்து அதில் இருந்த இரு மாம்பழங்களை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனை கேமரா மூலம் கண்டறிந்த சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், அவர் மீது புகார் அளித்தது.

இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு இந்தியருக்கு சம்மன் அனுப்பிய துபாய் போலீசார், திருட்டு வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இந்தியர் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, தனது தரப்பு விளக்கத்தையும் அளித்தார்.

அதில், சம்பவம் நடந்தன்று தான் மிகுந்த தாகத்துடன் இருந்ததாகவும், குடிக்க தண்ணீர் தேடியும் கிடைக்காததால், இந்தியாவுக்கு செல்ல இருந்த சரக்கு லோடில், ஒரு அட்டைப்பெட்டியில் இருந்த சுமார் 115 ரூபாய் மதிப்புடைய இரு மாம்பழங்களை எடுத்து சாப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் பயணியின் உடமையிலிருந்து மாம்பழங்களை தான் எடுக்கவில்லை எனவும் தெளிவுப்படுத்தினார். இருப்பினும் குற்றச்சம்பவம் உறுதியானதால், நீதிமன்றம் அதன் இறுதி தீர்ப்பை செப்டம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. சிறை தண்டனை அனுபவிக்க உள்ள இந்தியரிடம் இருந்து திருடிய பொருட்களுக்கான தொகையுடன், அபராதமும் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்