அமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

Update: 2019-09-20 03:25 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் பாதுகாப்பிற்காக தனி நபர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் திடீரென உணர்ச்சி வசப்படுவோரும், லேசாக மனநிலை பாதிக்கப்பட்டோரும் துப்பாக்கியை தவறாக பயன்படுத்தி மனித உயிரை காவு கொள்வது அங்கு வாடிக்கையாக உள்ளது. 

கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், பூங்காக்கள் என எங்காவது ஓரிடத்தில் அவ்வப்போது துப்பாக்கி சூடு நடந்த வண்ணம்தான் உள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் நடக்காத அமெரிக்க நகரங் களே கிடையாது என்று கூறும் அளவிற்கு அங்கு துப்பாக்கி கலாசாரம் பரவி உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதல் பற்றி கேள்விப்பட்டதும், ஏராளமான போலீசார் மற்றும் துப்பறியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடமான கொலம்பியா சாலை- 14வது தெரு சந்திப்பில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்பகுதி முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  


மேலும் செய்திகள்